தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகாரை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளிலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் எந்தெந்த டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து புகார் அளிக்கப்பட்டால் அதற்கான நடவடிக்கை உடனே எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதுவரை 1,977 பேர் மீது நடவடிக்கை எடுத்து 5.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், நடவடிக்கை எடுக்கப்படும் நபர்களை பாதுகாக்க ஒரு சில தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்துவதாகவும் கூறினார். மேலும், தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு ஊழல் நடைபெற்று வருவதாகவும் அதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.