மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்த நாய் மூன்று வயது சிறுமி மீது விழுந்ததில், சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 6) நடந்த இந்த இதயத்தை உருக்கும் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
வெளியான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், ஒரு பெண் இரண்டு குழந்தைகளுடன் தானேவில் ஒரு பரபரப்பான தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கிறார், அருகில் உள்ள கட்டிடத்தின் 5வது மாடியில் இருந்து கீழே விழுந்த நாய் 3 வயது சிறுமியின் மீது விழுந்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே மூன்று வயது சிறுமி உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து, நாயின் உரிமையாளர் ஜஹர் சயீத் (24) கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிறுமி இறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், அவாத் காவல் நிலையத்திற்குச் சென்று நாய் உரிமையாளர் மீது புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலிசார் நாய் உரிமையாளரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.