தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆன்லைன் மற்றும் செயலிகள் மூலம் கட்டணம் செலுத்துகின்றனர். இதைத்தான், மோசடி கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளது. இந்த நிலையில் தான், மின்சார கட்டணம் என்ற பெயரில் குறுந்தகவல் மூலம் மோசடி நடைபெறுவதாக காவல்துறை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது..
அதாவது, “இன்றிரவுக்குள் மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.. மின்இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், நாங்கள் அனுப்பும் லிங்க்கை கிளிக் செய்து, வெறும் ரூ.10 செலுத்தினால் போதும்” என்று சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்புகிறார்களாம் மோசடி குழுவினர்.
இதை உண்மை என்று நம்பிய வாடிக்கையாளர்களும், அவர்கள் அனுப்பிய லிங்க்கை ஓபன் செய்து, ரூ.10 அனுப்பி வைப்பார்கள். ஆனால், உங்களது வங்கி கணக்கின் மொத்த விவரங்களும் திருடப்பட்டு, பணத்தையும் மோசடி நபர்கள் பணத்தை எடுத்துக்கொள்வார்கள்.. எனவே, தப்பி தவறி கூட அவர்கள் சொல்லும் ஆப்பை டவுன்லோடு செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மின்சார வாரியம் தரப்பில் கூறுகையில், “மின்சார வாரியத்தின் சார்பில் இதுபோன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மின் நுகர்வோர் யாருக்கும் வாட்ஸ்அப் மூலம் எந்த தகவலும் இதுவரை பகிரப்படவில்லை. ஆன்லைன் மோசடி கும்பல் தங்களின் மோசடிக்கு துணையாக வாரியத்தின் பெயரை பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். குறிப்பாக செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் தகவல்கள் மட்டுமின்றி பணமும் பறிபோகும் வாய்ப்பு உள்ளது. எனவே, வாட்ஸ்அப் தகவலை நம்பி மின் நுகர்வோர் யாரும் ஏபிகே செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்” என்றார்.
Read more ; கர்நாடகா முதல்வர் சித்தராமையா ராஜினாமா? பரபரப்பில் அரசியல் களம்..!!