தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து முதன்மை சென்னை மாநகராட்சி ஆணையாளர் சார்பில் திருமண மண்டபங்கள், திரையரங்குகள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது, அதில், பொதுமக்கள் அதிகளவில் உள்ள இடங்களில் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். கடை உரிமையாளர்கள் தங்களுடைய கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் இருப்பதையும், முகக்கவசம் அணிவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
பொது இடங்களில் அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். திருமண மண்டபங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்கும்படி சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்த வேண்டும். வணிக நிறுவனங்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க பொறுப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் மீது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உத்தரவின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதே போல போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்; கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது கட்டாயம். எனவே சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் பேருந்துகளில் பணியில் உள்ள ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரை கட்டாயம் முகக்கவசம் அணியவும், பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களும் முகக்கவசம் அணிவதை நடத்துநர் உறுதி செய்யவும் அறிவுறுத்த வேண்டும். பேருந்து பணிமனைகளில் பணியாளர்கள் முகக்கவசம் அணிவதையும் சமுக இடைவெளியை பின்பற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். செலுத்தாத நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். பணிமனையின் மேலாளர் சம்பந்தப்பட்ட மண்டல நல அலுவலரை அனுகினால் பணிமனையிலே தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.