பாவங்களை போக்கும் கோயில்கள் இந்தியாவில் பல இருந்து வருகின்றன. ஆனால் இவற்றுள் தொன்மையானதாகவும், பல பெருமைகளைக் கொண்டதாகவும் விளங்கும் அதிசய கோயில் தான் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் ஸ்ரீ வாஞ்சியம் ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ வாஞ்சிநாதர் கோயில். தேவார பாடல்கள் பெற்ற கோவில்களில் 70ஆவது கோயிலாக வாஞ்சிநாதர் கோயில் அமைந்துள்ளது.
மேலும் சைவ அடியார்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் போன்ற மூன்று அடியார்களால் புகழ்ந்து பாடப்பட்ட கோயில் எனும் பெருமையைக் கொண்டது. சோழ, பாண்டிய, நாயக்க மன்னர்களால் போற்றி கொண்டாட்டப்பட்ட கோயிலாக இருந்து வந்தது.
இந்தக் கோயிலின் முக்கிய கடவுளாக எமதர்மர் இருப்பதுதான் ஸ்ரீ வாஞ்சிநாதர் கோயிலின் சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. மேலும் மனித உயிர்களை எடுத்துச் செல்லும் பாவத்தை போக்க எமதர்மன் சிவபெருமானை நாடியுள்ளார். சிவபெருமான் ஸ்ரீ வாஞ்சிநாதர் கோயிலில் கடும் தவமிருந்து பூஜை செய்ய சொல்கிறார். அவ்வாறே கடும் தவம் இருந்து தன் பாவங்களைப் போக்கி சிவனின் அருள் பெற்றார் என்று புராண கதைகளில் கூறப்பட்டுள்ளது.
இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் தன் பாவங்களை போக்க வேண்டிக் கொள்ளும் பொழுது அடுத்த ஜென்மம் இல்லாமல் அமைதியான இறுதி காலத்தை சிவபெருமான் வழங்குவார் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் ஸ்ரீ வாஞ்சிநாதர் கோயிலில் அமைந்துள்ள தீர்த்த தளங்களில் குளிக்கும் போது ஏழு ஜென்ம பாவங்களும் விலகும் என்றும் கூறி வருகின்றனர்.