‘TN Alert’: டிசம்பர் மாதம் நெருங்க நெருங்க மழை வெள்ளம் பற்றிய சிந்தனைகள் எழுவதை தடுக்கமுடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டின் நினைவுகள் அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது. வட கிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் மழை வெள்ள பிரச்னையை எதிர்கொள்ள புதிய வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது அரசு. அதன் ஒரு பகுதியாக TN-Alert என்ற செயலியை அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை தலைமை செயலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். நெஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, சென்னை மெட்ரோ, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் இந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், “முன்பெல்லாம் வடகிழக்கு பருவமழையானது பருவம் முழுவதும் பரவலாக பெய்துகொண்டிருந்தது. சமீபமாக காலநிலை மாற்றத்தால் சில நாட்களிலேயே மொத்தமாக பெய்துவிடுகிறது. சொல்லப்போனால் சில மணிநேரங்களிலேயே பருவமழை மொத்தமும் கொட்டித்தீர்த்துவிடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், “சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வானிலை முன்னெச்சரிக்கையால் நாம் பெரிய அளவிலான சேதங்களைத் தவிர்க்க முடியும். பெய்த மழையின் அளவு எவ்வளவு? என்பதை அது பெய்கின்ற நேரத்தில் தெரிந்தால்தான், அணைகளில் நீர் திறப்பு மேலாண்மை, வெள்ள முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் சரியாகச் செய்ய முடியும். அதற்காக, நாம் தற்போது 1400 தானியங்கி மழைமானிகளையும், 100 தானியங்கி வானிலை மையங்களையும் நிறுவி நிகழ்நேர தகவல்களை பெற்று வருகிறோம்.
இந்தத் தகவல்கள் பொதுமக்களுக்கும் அவ்வப்போது கிடைத்தால் அவர்கள் தங்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திட்டமிட வசதியாக இருக்கும் என்பதால்தான் ஒரு முக்கியமான செயலியை உருவாக்கி இருக்கிறோம். வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளிட்ட விபரங்களை தமிழிலேயே அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு TN-Alert என்னும் கைப்பேசி செயலியை உருவாக்கியுள்ளது.” எனப் பேசினார்.
Readmore: சீனா ஓபன் டென்னிஸ்!. உலகின் NO.1 வீரர் ஜானிக் சின்னர் அரையிறுதிக்கு தகுதி!