சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வீனஸ் நகர் பகுதியில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேரில் சென்று பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்தார். கொளத்தூர் துணை மின் நிலையம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படுமா? என்ற கேள்விக்கு, “கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை” என பதிலளித்தார்.
தொடர்ந்து, அமைச்சரவை மாற்றத்திற்கு வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் சென்றார். முன்னதாக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். பல்வேறு மாவட்டங்களும் திமுக கூட்டங்களிலும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். அண்மையில், உதயநிதி துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் பரவியது.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “ஒவ்வொரு அமைச்சரும் முதலமைச்சருக்கு துணையாகத்தான் இருப்போம். எந்த பதவி வந்தாலும் இளைஞரணி செயலாளர் பதவியே எனக்கு மிகவும் நெருக்கமானது. இதையேதான் நம் தலைவரும் கூறியுள்ளார். நானும் அதையே சொல்கிறேன்” எனக்கூறி முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.