குழந்தை கடத்தல் சம்பவங்கள் வடசென்னை பகுதியில் அதிகளவு நடப்பதாக பரவும் காணொளிகள் சோசியல் மீடியாவில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. இவை பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை பெருநகர காவல்துறை தரப்பில், அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “சமீப காலமாக சில நபர்கள், குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதை காண முடிகிறது.
இதுபோன்ற காணொலிகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டுமென்ற பிரதான எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் பரப்பப்பட்டு வருகின்றன என்பதினை சென்னை காவல்துறை உறுதிபட தெரிவித்து கொள்கிறது. இதுபோன்ற போலியான செய்திகளை கேட்டோ, காணொலிகளை பார்த்தோ, பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ, பதற்றமடையவோ தேவையில்லை என்று சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
பொதுமக்களுக்கு இதுசம்பந்தமாக ஏதாவது சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் சென்னை பெருநகர காவல்துறை உதவி எண் 100 அல்லது 112 கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்புவோர் உடனடியாக இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மீறினால் அத்தகையோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.