வனவாசத்தில் ஆரம்பித்து, ராவணனை ராமன் வீழ்த்தும் வரையிலான புராண கதையைச் சொல்கிறது இந்த ஆதிபுருஷ். சினிமா, டிவி சீரியல் எல்லாம் பார்க்காத பிளாக் & ஒயிட் காலத்து நபர்கள் என்றாலும், வால்மீகி எழுதியது, கம்பர் எழுதியது என ராமாயணத்திற்கான கதைகளும், அதையொட்டிய கிளைக் கதைகளும் இங்கு ஏராளம். மகாபாரதம் அளவுக்கு சிக்கலான கதையும் அல்ல. மிகவும் எளிய கதை. ஆனால், அதை எப்படி ஒவ்வாமை வரும் அளவுக்கு எடுத்தார்கள் என்பதே புரியாத புதிராக இருக்கிறது. பிரபாஸ் படத்தில் ராகவர் என்றே அழைக்கப்படுகிறார். ராமருக்கு எப்படி மீசை இருக்கலாம். பொருத்தமாகவே இல்லை என ஒரு பக்கம் சண்டை நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், பிரபாஸே ராமர் வேடத்துக்கு பொருத்தமாக இல்லை என்பது தான் பெருந்துயரம். அதிலும் தசரதனும் பிரபாஸ் தான். சீதை என்னும் ஜானகியாக கீர்த்தி சனோன். அப்படியே ஸ்கிப் செய்துவிட்டு அடுத்த கதாபாத்திரம் பற்றிப் பார்க்கலாம்.
ஒட்டுமொத்த பர்னிச்சரையும் ஒன்றாய் உடைத்த இடம் லங்கேஸ்வரம் எனப்படும் இலங்கை தான். ராவணனாக சைஃப் அலி கான். பத்து தலைகளை வைத்துக்கொண்டு ஜானகியிடம் பேசும் காட்சியை எப்படி நினைத்து எடுத்தார்களோ தெரியவில்லை. ஆனால் பார்க்கும் நமக்கு அந்நியன் விக்ரம் , ‘ அந்த அஞ்சு கொலையும் நான் பண்ணல… நாந்தாண்டா பண்ணினேன்’ டோனில் தான் இருந்தது. ராவணனுக்கு எதுக்கு Dissociative identity disorder எல்லாம் இருப்பது போல் எடுத்திருக்கிறார்கள் என்பது இயக்குநர் ஓம் ராவுத்திற்கே வெளிச்சம். ஏம்பா தலைவலி தைலம் விளம்பரத்துல கூட ராவணன் அழகா பத்து தலையோட வருவாரேப்பா..!. இதெல்லாம் பத்தாது என நினைத்த யாரோ, சைஃப் அலி கானை சற்று ஸ்டைலாக நடக்க சொல்லியிருக்கிறார்கள். ‘ கோவில் பட வடிவேலு’ கூடையைக் கட்டிக்கொண்டு நடப்பாரே அது எவ்வளவோ தேவலாம்.
படத்தின் போஸ்டர், டீசர் என எல்லாவற்றிலும் பலமாக நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டது படத்தின் VFX தான். அத்தனை கோடிகளைக் கொட்டியும் உங்களால் இப்படியான ஒரு அவுட்புட்டைத்தான் தர முடியுமா என்பதுதான் இணையவாசிகளின் கேள்வியாக இருந்தது. படம் வருவதற்குள் எல்லாம் சரியாகிவிடும் என நம்பியவர்களைத்தான் பிராங்க் செய்திருக்கிறது ஆதி புருஷ் டீம். படத்தின் பெரும்பலம் சஞ்சித் பல்ஹரா, அன்கில் பல்ஹராவின் பின்னணி இசை. சுமாரான காட்சிகளால் கூட நமக்கு கூஸ்பம்ஸ் வரும் என்பதற்கு இவர்களின் பின்னணி இசை ஒரு உதாரணம். ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகள்; கேம் ஆஃப் த்ரோன்ஸ், சக்திமான் மாதிரியான ஃபேண்டஸி கதைகள் என பலவற்றை பெரிய திரையில் லயிக்க லயிக்க பார்க்க வேண்டும் என்கிற ஆசை எல்லா பார்வையாளனுக்கும் உண்டு.