இஸ்ரேல் – ஹமாஸ் போரால் பாதிக்கப்பட்ட காசா நகருக்கு ஸ்டார் லிங்க் நிறுவனம் இணைய சேவையை வழங்க இருப்பதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
கடந்த 7-ந்தேதி, இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்தது. இசை திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் உள்பட எல்லை பகுதியில் தங்கியிருந்தவர்களை கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. 23-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான மோதல் இன்றும் தொடர்ந்து வருகிறது. இதில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது. ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும், போரில் அடையாளம் தெரியாத 1000க்கும் மேற்பட்ட உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு அதிகாரி ஒருவர் அதிர்ச்சி தகவலை நேற்று வெளியிட்டிருந்தார்.
வான்வழி தாக்குதல் நடத்திவந்த இஸ்ரேல் ராணுவம், தற்போது தரை வழி தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் நடவடிக்கையில் பாலஸ்தீனத்தின் காசா நகர் தரைமட்டம் ஆக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த போர் நடவடிக்கையால் காசா நகரின் தொலை தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க பிரதிநிதி அலெக்சாண்டிரியா ஆகேசியோ தனது அறிக்கையில், காசா நகரில் வாழும் 22 லட்சம் பேர் எந்தவொரு தொலை தொடர்பும் இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளனர். பத்திரிக்கையாளர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் என அனைவரும் இதனால் பேராபத்தில் உள்ளனர். தொலைத்தொடர்பை துண்டிப்பது என்பதை அமெரிக்கா கண்டிக்கிறது என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அலெக்சாண்டிரியா ஆகேசியோ சமூக வலைதள பதிவிற்கு பதிலளித்து இருந்த எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் நிறுவனம் காசாவுக்கான இணையதள சேவையை வழங்க முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் காசாவில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச உதவி குழுக்கள் ஸ்டார்லிங்க்-கின் செயற்கைக்கோள் மூலம் நேரடியாக இந்த இணைய சேவையை பெரும் எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரின்போது, இதேபோன்று இணையதள சேவையை மஸ்க் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.