Israel-Iran war: இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா மரணத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இஸ்ரேல் மீது ஈரான் 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி பெரும் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. ‘ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி மிக பெரிய தவறை செய்துள்ளது. இதற்கு பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும்’ என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். உலக நாடுகள் அச்சத்தில் உள்ள நிலையில், ஈரான் ஏவுகணைகளை சுட்டுவீழ்த்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, சமூகவலைதளத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை ஆஸ்திரேலியா கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இஸ்ரேல் அரசு சொல்லும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள். 24 மணி நேர உதவி எண்களை 972-547520711, 972-543278392 தொடர்பு கொள்ளலாம் என இந்திய தூதரகம் அறிவித்தது. இஸ்ரேல் ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
ஈரான் ஏவுகணை தாக்குதலை துவக்கிய உடனேயே மேற்கத்திய நாடுகளின் எண்ணை சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை மூன்று சதவீதம் அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம் என தகவல்கள் வெளியாகின்றன.