கொரோனா தொற்றின் முடிவு நாம் நினைக்கும் அளவுக்கு அருகில் இல்லை என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தொற்று முடிவுக்கு வருவது என்பது நாம் நினைக்கும் அளவுக்கு அவ்வளவு அருகில் இல்லை என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் மக்கள் கொரோனா தொற்றைக் கடந்து வருகின்றனர். ஆனால், மக்களை அடிக்கடி அச்சுறுத்தும் வகையில் புதுப்புது வடிவங்களில் மாறி அச்சுறுத்தி வருகிறது கொரோனா.
இந்நிலையில், செவ்வாய்க் கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ், “கொரோனா வைரஸின் புதிய அலைகள் தோன்றிக் கொண்டே உள்ளன. இது கோவிட் 19-ன் முடிவு நாம் நினைக்கும் அளவுக்கு அவ்வளவு அருகில் இல்லை என்பதைக் காட்டி உள்ளது. மேலும், கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலையளிக்கிறது. இது சுகாதார அமைப்புகள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மீது அழுத்தம் கொடுக்கிறது. எனவே, அரசு கொரோனா தொற்றின் திட்டங்களைச் சரிபார்த்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வைரஸ் நம்மை முந்த நினைக்கும்போது, நாம் அதைப் பின்தள்ள வேண்டும். மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.