மக்களவை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பிறகு அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். நாளை மாலை பிரச்சாரம் ஓய்ந்த பிறகு எந்தவொரு அரசியல் கட்சியும் வேட்பாளரும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடக் கூடாது. பேஸ்புக், வாட்ஸ் அப், எக்ஸ் வலைதளம் போன்ற சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்யக் கூடாது. நாளை மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொள்பவர்கள் மீது 2 ஆண்டு தண்டனை விதிக்கப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும்.
வெளியூரில் இருந்து பிரச்சாரம் மேற்கொள்ள வந்தவர்கள் நாளை மாலை 6 மணிக்குள் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும். அரசியல் கட்சியினர் வாக்காளர்களை தங்கள் வாகனங்களில் வாக்குச் சாவடிக்கு அழைத்து வரக் கூடாது. தேர்தல் ஏஜென்ட் ஒரு வாகனத்திலும் கட்சிக்காரர்கள் ஒரு வாகனத்திலும் பயணிக்க வேண்டும். வாக்குச் சாவடிக்கு 200 மீட்டருக்கு முன்பே அரசியல் கட்சியினர் தங்களுக்கான கூடாரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.
தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாகன அனுமதி நாளை மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்கென ஒரு வாகனத்தில் பயணிக்கலாம்” என்று பல்வேறு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
Read More : தயிர் மற்றும் மோரில் எது சிறந்தது..? இந்த கோடை வெயிலுக்கு எதை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்..?