டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதி, குழந்தைப்பேறின்மையால் தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 2009-ல் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையை மேற்கொண்டனர். இதில் ஆரோக்கியமான இரட்டை பெண் குழந்தைகள் அத்தம்பதிக்கு பிறந்துள்ளன. தங்கள் நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் அவர்கள் திளைத்து வந்துள்ளனர். ஆனால், நாட்கள் செல்லச்செல்ல பெற்றோருக்கு குழந்தைகள் விஷயத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ரத்தம் மற்றும் மரபணு சோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவில், இரு பெண் குழந்தைகளின் தந்தையும் வேறு ஒருவர் என்பது உறுதியானது. இதையடுத்து, அவர்கள் தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த ஆணையம், தவறிழைத்த அந்தத் தனியார் மருத்துவமனைக்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மருத்துவமனை செய்த தவறு பெற்றோருக்கு தீரா மனஉளைச்சலை ஏற்படுத்தியதுடன், ஆயுள் முழுக்க பரிதவிக்கும் நிலைக்கு அவர்களை தள்ளிவிட்டதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர். மேலும், காளான்போல் முளைத்து வரும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள், நெறிகளை காற்றில் பறக்கவிடுவதாகவும், அவர்களை ஒழுங்குபடுத்த விதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்