உலகை அச்சுறுத்தி வரும் JN.1 கொரோனா வைரஸைக் கண்டு மீண்டும் வீட்டுக்குள் முடங்கும் சூழல் வருமோ என்ற அச்சம் ஒரு பக்கம் எழுகிறது. தற்போது ஜெ.என்.1 வைரஸ் குறித்த ஆய்வுகள் சென்று கொண்டிருக்கின்றன, அந்த வகையில் உலக சுகாதார அமைப்பு இந்த புதிய ஜெ.என்.1 கொரோனா வைரஸ் குறைந்த அளவிலான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த புதிய வைரஸை கண்டு பயப்படத் தேவையில்லை. இருப்பினும் பரவும் நோய் குறித்து கவனத்துடன் இருக்க வேண்டியதும் நமது கடமை ஆகிறது. ஆகவே, இந்த வைரஸுக்கு எதிராக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அச்சமின்றி நமது அலுவல்களில் ஈடுபடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர் சளி, காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் பிரச்னை போன்ற பாதிப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். மருத்துவரின் பரிந்துரை இன்றி மருந்து கடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிடக் கூடாது. அதேபோல், சுயமருத்துவமும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இதனால் பாதிப்பு அதிகமாகும் வாய்ப்புண்டு.
நோய் பாதித்தவர்கள், வயதானவர்கள் அதிக கூட்டமுள்ள மற்றும் காற்றோட்டம் குறைந்த பகுதிகளுக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தற்போது உடல் நலத்துக்கு பாதிப்பு தரும் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் அதிகாலை நேரங்களில் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். குடிநீரை நன்றாகக் கொதிக்க வைத்து காய்ச்சி குடிக்க வேண்டும். சத்தான காய்கறிகள், ஆரஞ்சு, ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் நெரிசலான பகுதிகளில் மாஸ்க் அணிவது அவசியம். மேலும், அதிக கூட்டம் உள்ள இடங்களை தவிர்ப்பது அதைவிட நன்மை தரும். இருமல், தும்மலின்போது கட்டாயம் கைகுட்டைகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய மாஸ்க்குகளை கண்ட இடங்களில் போடாமல் மூடிய குப்பை தொட்டிகளில் போட வேண்டும். நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் அவர்களிடம் தொடர்பு உள்ளவர்கள் பரிசோதனை செய்து கொண்டால் மற்றவர்களுக்கு நோய் பரவுவதைத் தவிர்க்க முடியும்.அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுதல் அல்லது சானிடைசர் பயன்படுத்துவது நல்லது.