சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான படம் ஜெயிலர். இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. மேலும் இந்த படம் வெளியான ஒரு வாரத்தில் 500 கோடி வசூலித்து சாதனை படைத்தது. ரஜினியின் தொடர் தோல்வி படங்கள், இயக்குநர் நெல்சனின் கடந்த படமும் தோல்வி என இருந்த போதிலும் இவர்கள் கூட்டணியில் உருவான இந்த படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் இதுவரை படைத்திராத சாதனையை படைத்து வருகிறது.
நேற்றைய தினம் ஜெயிலரின் வரலாற்று வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் ரஜினிகாந்த்தை சன் குழும தலைவர் கலாநிதி மாறன் சந்தித்து பேசினார். மேலும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு கலாநிதி மாறன் காசோலை வழங்கி பாராட்டினார்.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினியின் வீட்டு வாசலில் BMW X7 மற்றும் BMW i7 கார்களை நிறுத்திவைத்து அவருக்கு பிடித்த காரை தேர்ந்தெடுக்கும் படி கூறியதை அடுத்து, ரஜினிகாந்த் BMW X7 காரை தேர்ந்தெடுத்தார். பிறகு சூப்பர் ஸ்டார் தேர்வு செய்த புத்தம் புதிய BMW X7 காரின் சாவியை கலாநிதி மாறன் வழங்கினார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது “X” சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.