கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி(17). ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஒரு பிரைவேட் ஸ்கூலில் சின்னசேலம் லில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். , இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி ஹாஸ்டலின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சின்னசேலம் காவல்துறையினர், மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது தொடர்பாக வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மாணவியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளிவந்த நிலையில், மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது இதனால் போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்க தொடங்கினர்.
தொடர்ந்து பள்ளியின் முகப்பின் மீது ஏறி நுழைவு வாயிலை உடைத்து உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள், பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்களை உடைத்தனர். இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி காவல்துறையினர். துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்களை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த பேருந்துகளுக்கு தீ வைத்து எரித்தனர். இதனால் அந்த பகுதி கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது. சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை செய்துள்ள நிலையில், போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட வன்முறை போராட்டக்காரர்கள் வாட்ஸ் அப் மூலம் ஒன்று திரண்டதாக உளவுத்துறை விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.”ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு போராட்டம்” என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு அமைத்து போராட்டக்காரர்கள் திரண்டுள்ளனர். ஒரே நாளில் 500 பேர் வாட்ஸ் அப் குழுவில் இணைந்து அதன் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக உளவுத்துறை விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.