கருணாநிதி நினைவு தினத்தையொட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை ஐந்து முறை ஆட்சி செய்தவரும், திமுகவின் தலைவருமாக இருந்தவர் மு.கருணாநிதி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவை அடுத்து திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சூழலில் கருணாநியின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி அனுசரிக்கப்பட இருக்கிறது. இதனையொட்டி திமுக சார்பில் அமைதி பேரணி நடக்குமென்று அக்கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமைக் அலுவலகமான அண்ணா அறிவாலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணாவின் மறைவுக்கு பிறகு, திமுக தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக்கொண்டவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
அவரது 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்ட கட்சியின் முன்னணியினர் கலந்து கொள்ளும் “அமைதிப் பேரணி” வருகிற 7ஆம் தேதி தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 8.30 மணிக்கு சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரர் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகில் இருந்து புறப்பட்டு காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர், கட்சி நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கருணாநிதியின் நினைவு போற்றி அஞ்சலி செலுத்த வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.