நல்லம்பள்ளி வனப்பகுதியில் உள்ள கல்குவாரி அருகே கேரளாவைச் சார்ந்த இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயில் செல்லும் வழியில் பூதனல்லி வனப்பகுதியில் கல்குவாரி ஒன்று இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அந்தக் கல்குவாரி அருகே இரண்டு சடலங்கள் இருப்பதைக் கண்ட, கால்நடை மேச்சலுக்கு சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற அதியமான் கோட்டை போலீசார், சடலங்கள் இருக்கும் இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது இருவரின் சடலம் 10 மீட்டர் இடைவெளியில் இருந்துள்ளது. மேலும், சடலத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் கேரள பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும், இரண்டு பேரின் சடலத்தில் லேசான காயங்கள் இருந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து கார் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் இருவரும் கேரளாவைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் நிக்கோல் குருஸ் என்பது தெரியவந்தது. இந்நிலையில் இது தற்கொலையா? அல்லது யாரேனும் கொலை செய்துவிட்டு, இந்த வனப்பகுதியில் வீசிச் சென்றனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். நல்லம்பள்ளி அருகே வனப்பகுதியில் இருவர் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.