கும்பகோணம் மோதிலால் தெருவில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் தனியார் சூப்பர் மார்க்கெட் ஒன்று இருக்கிறது. இங்கே வீட்டுக்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களையும் போன் மூலமாக வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் பெற்று அந்த பொருட்களை கடையில் உள்ள விற்பனையாளர்கள் மூலமாக வீட்டிற்கு அனுப்பி வைப்பது வழக்கமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் சூப்பர் மார்க்கெட் மேலாளருக்கு தொலைபேசியின் மூலமாக எங்களுக்கு 7️ மூட்டை அரிசி உடனடியாக இந்த முகவரிக்கு வேண்டும் உடனடியாக அனுப்பி வையுங்கள் என்று தெரிவித்துள்ளனர் இதனை அடுத்து 2 விற்பனையாளர்கள் 7 மூட்டை அரிசியை இரண்டு இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஆர்டர் கொடுத்த முகவரிக்கான கும்பகோணம் பந்தடி மேடை அருகே இருக்கின்ற கோவில் பின்புறம் நின்று கொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க நபரிடம் வந்துள்ளனர்.
அப்போது அந்த மர்ம நபர் 6️ மூட்டை அரிசியை இங்கே இறக்கி வையுங்கள் மீதமுள்ள ஒரு மூட்டையை ஜான் செல்வராஜ் நகரில் இருக்கின்ற என்னுடைய நண்பர் வீட்டில் இறக்கி வைத்துவிட்டு வாருங்கள் இதற்குரிய பணத்தை தருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகு 2 விற்பனையாளர்களும் மீதம் இருக்கின்ற ஒரு அரிசி மூட்டையுடன் அந்த முகவரிக்கு சென்றபோது அங்கே அந்த நபர் தெரிவித்தவர் இல்லாததால் அவர்கள் இருவரும் அங்கிருந்து மீண்டும் 6️ முட்டையை இறக்கி வைத்த இடத்திற்கு வந்தனர். ஆனாலும் அங்கே இறக்கி வைத்த ஆறு மூட்டை அரிசியும் அந்த நபரும் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் விற்பனையாளர்கள் 2 பேரும் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் புகார் வழங்கினர் இதனைத் தொடர்ந்து சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் பக்ருதீன் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் அதற்குரிய மனு ரசீது வழங்கி அந்த பகுதியில் இருக்கின்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அனைத்து வணிகர்கள் சங்க கூட்டம் அமைப்பின் செயலாளர் சத்யநாராயணன் தெரிவித்ததாவது, இது போன்ற நூதன மோசடிகள் கும்பகோணம் பகுதியில் இருக்கின்ற வணிகர்களிடம் நடைபெற்று வருகிறது. அந்த மர்ம நபர்கள் வணிகர்களிடம் 5000 முதல் 10000 ரூபாய் வரையில் சில்லறை காசுகள் எங்களிடம் இருக்கிறது. சுவாமிமலை கோவிலுக்கு வாருங்கள் என்று வரவழைத்து வணிகர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு இதோ மாற்றி தருகிறோம் என்று தெரிவித்து பணத்திற்கான சில்லறை காசுகளை கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறார்கள் என்று கூறி இருக்கிறார்.
அதோடு இது குறித்து கோவில் அலுவலரிடம் கேட்டபோது கோவில் உண்டியல் காணிக்கைகள் நேரடியாக வங்கியில் வழங்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கிறார்கள். இதுபோன்ற நூதன மோசடியில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.