திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாக சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களையும் பொதுமக்களையும் சசிகலா சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி, உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திற்கு வந்த வி.கே. சசிகலாவுக்கு வேங்கையன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, “தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கொலை, கொள்ளை, பெண்களிடம் செயின் பறிப்பு உள்ளிட்ட செய்திகள் தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தினம் தோறும் வந்த வண்ணமாக உள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. இரட்டை இலை சின்னத்தை முடக்க முயல்வோர்களுக்கு மக்கள் தக்க பாடங்கள் புகட்டுவார்கள். அதிமுக உருவாக்கிய மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அதனை வழி நடத்திய ஜெயலலிதா போன்றவர்களின் கனவோடு இந்த கட்சி நூற்றாண்டு காலம் தொடர்ந்து மக்கள் பணியாற்றும்” என்றார்.