இலங்கையை போல் இந்தியாவிலும் ஒரு மிகப்பெரிய போராட்டம் நடக்கலாம் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், ”பிரதமர் மோடி தான் ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்குள் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறினார். அதன்படி கடந்த 8 ஆண்டுகளில் 16 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தந்திருக்க வேண்டும். ஆனால், தற்போது வேலையில் இருப்பவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். ரயில்வே துறையில் 90ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப முன்வரவில்லை. இதனால், கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தி 4 ஆண்டுக்கு வேலைவாய்ப்பு என்று இளைஞர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். திமுக கடந்த ஓராண்டுக்கு முன் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கூறும் தமிழக பாஜகவினர், கடந்த 8 ஆண்டுகளாக வாக்குறுதிகளை நிறைவேற்றித்தராமல் உள்ள பிரதமர் மோடியிடம் அதனை போராடி பெற்றுக் கொடுக்க வேண்டும். இலங்கையில் விலைவாசி உயர்வுக்கு அந்நாட்டின் அதிபர் ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர்தான் காரணம் எனக்கூறி மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால், ராஜபக்சே ராஜினாமா செய்தார்.
அதுபோன்ற ஒரு போராட்டம் இந்தியாவில் நடைபெறாது என பிரதமர் மோடி நினைக்கிறார். நமது நாட்டில் மக்கள் மிகப்பொறுமையாக உள்ளனர். தாங்கி கொள்ள முடியாத விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்தை சகித்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இதனால், மக்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர் என அர்த்தமில்லை. தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்த நல்ல நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அப்போது இலங்கையை போல் இங்கும் ஒரு போராட்டம் நடக்கலாம்”. இவ்வாறு அவர் பேசினார்.