மிக்ஜாம் புயலால் பாதித்த தொழில் நிறுவனங்களுக்கு 6% வட்டியில் ரூ.3 லட்சம் வரை கடனுதவி.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; கடந்த டிசம்பர் மாதத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெரு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் குறுகிய கால நிதி தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலமாக 6 விழுக்காடு வட்டியுடன் குறுகிய கால கடனுதவியாக ரூ. 3 இலட்சம் வரை வழங்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விழையும் நிறுவனங்கள் புயல் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயங்கிக் கொண்டிருந்த உற்பத்தி அல்லது சேவை சார் நிறுவனமாக இருக்க வேண்டும். இந்நிறுவனங்களின் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான விற்றுமுதலில் 20 விழுக்காடு குறைந்தபட்சமாக ரூ. 1 இலட்சம் முதல் அதிகபட்சம் ரூ. 3 இலட்சம் வரை 6 விழுக்காடு வட்டி விகிதத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலமாக குறுகிய கால கடனாக வழங்கப்படும். இக்கடனை பெறும் நிறுவனங்கள் 18 மாத தவணைகளில் கடன் தொகையினை திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும் இக்கடனுதவியை பெறுவதற்கு எந்தவிதமான ஈடு பிணையமும் வழங்க வேண்டிய அவசியம் இல்லை.
இக்கடனுதவி தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி அனைத்து பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும். இது தொடர்பாக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மற்றும் மாவட்ட தொழில் மையமும் இணைந்து இன்று சிறப்பு கடன் வசதி முகாம்கள் நடத்த உள்ளனர். புயல் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குன்றத்தூர் வட்டாரம், திருப்பெரும்புதூர் வட்டாரம் மேவலூர்குப்பம், காட்ராம்பாக்கம் மற்றும் புதுப்பேர் கிராமங்களில் அமைந்துள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி, சேவை சார்ந்த தொழில் நிறுவனங்கள் இந்த கடன் முகாம்களில் கலந்து கொண்டு கடன் உதவி பெற விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.