லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக பேச்சாளர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். எம்.ஆர்.ராதாவின் பேரனும், நடிகருமான வாசு விக்ரம் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
மறைந்த எம்.ஆர்.ராதாவின் பேரனும், திரைப்பட நடிகருமான எம்.ஆர்.ஆர். வாசு விக்ரம் கடந்த 2013ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அன்றைய பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். எம்.ஆர்.ராதாவின் 5 மகன்களில் ஒருவரான எம்.ஆர்.ஆர். வாசுவிற்கு இரு மகன்கள். அவர்களில் வாசு விக்ரம் சினிமா மற்றும் டெலிவிஷன் தொடர்களில் நடித்து வருகிறார். கடந்த 2013இல் திமுகவில் இணைந்த வாசு விக்ரம், ஒவ்வொரு தேர்தல்களின் போதும் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
அந்தவகையில் இந்த முறையும், லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்கப்பட்டுள்ளார். நடிகர் வாசு விக்ரம், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் ஏப்ரல் 3ஆம் தேதி திருவள்ளூரில் தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி வரை பல்வேறு தொகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஆர்.ராதாவின் மகளான ராதிகா சரத்குமார், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். எம்.ஆர்.ராதாவின் பேரன் வாசு விக்ரம் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். அதேசமயம், தனது அத்தை ராதிகா போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் வாசு விக்ரம் பிரச்சாரம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாசு விக்ரம் மட்டுமல்லாது, நடிகர் போஸ் வெங்கட், நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான கருணாஸ், திராவிட இயக்கப் பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத், மதிமாறன் ஆகியோரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண அட்டவணைகளும் திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.