மத்தியப்பிரதேச மாநிலம் மோரேனா மாவட்டத்தில் உள்ள ரதன் பசாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்பால் சிங். இவருக்கு ஷிவானி என்ற 18 வயது மகள் இருந்தார். ஷிவானியும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ராதேஷியாம் என்ற 21 வயது இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இருவரின் காதல் விவகாரம் ஷிவானியின் குடும்பத்திற்கு தெரியவந்துள்ளது. இந்த காதலுக்கு ஷிவானியின் தந்தை ராஜ்பால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராஜ்பாலின் எதிர்ப்பை மீறி காதலர்கள் இருவரும் தொடர்ச்சியாக சந்தித்து பேசி பழகி வந்துள்ளனர். இது பெண்ணின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. இதனால், அவர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூன் 3ஆம் தேதி காதல் ஜோடி ஒன்றாக சந்தித்துள்ளனர். அப்போது ஷிவானியின் தந்தை மற்றும் உறவினர்கள் சிலர் ஜோடி இருவரையும் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். மேலும், கொலை செய்யப்பட்ட இருவரின் உடலையும் முதலைகள் அதிகம் இருக்கும் சம்பல் நதியில் தூக்கி வீசியுள்ளனர். சம்பவத்திற்கு பின் ஷிவானியின் குடும்பத்தார் ஒரு வாரம் வீட்டை காலி செய்து தலைமறைவாகியுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த காதலனின் பெற்றோர் சந்தேகத்தின் பேரில் காவல்துறையிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஷிவானியின் தந்தை ராஜ்பால் சிங் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மேலும், சம்பல் நதியில் பேரிடர் மீட்பு குழு கொலை செய்யப்பட்ட ஜோடியின் உடலை தீவிரமாக தேடி வருகிறது. உடல் கிடைத்து அதற்கு பிரேத பரிசோதனை நடைபெற்ற பின்னரே கொலை குறித்த முழு விவரம் தெரிய வரும் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இளம் ஜோடி ஆணவக் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.