மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கின்ற பால்கர் மாவட்டத்தில் பந்தன்பாடா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த ஜனவரி 20-ல் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பெயரில் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று அந்த பிணத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உடற்குறு ஆய்வில் அந்த நபர் கழுத்தை நெரித்து மற்றும் தலையில் தாக்கி கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் போலீசாருக்கு இறந்தவரின் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது. மேலும், ஐந்து பேர் மீது அவர்களின் சந்தேகம் வலுத்த நிலையில் அவர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதன்படி, இறந்த நபருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்ததாகவும், இதை பலமுறை அவரது மனைவி கண்டித்ததாகவும் ஆனால், அதை பொருட்படுத்தாத அந்த நபர் தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி நான்கு பேரிடம் சேர்ந்து கணவரை கொலை செய்து பிணத்தை வீசியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த மனைவி மற்றும் கொலை செய்ய உதவியாக இருந்த ஐந்து பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.