ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் ஸ்ரீ ராமரின் குழந்தை பருவ சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவிலில் வைத்து நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான சிறப்பு விருந்தினர்களும் பக்தர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
2019 ஆம் வருடம் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 1,000 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாட்டின் சில பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. ராமர் கோவில் பற்றி தவறாக சித்தரித்து பேசியதாக இளைஞர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் நடந்த பகுதி பற்றிய சரியான தகவல்கள் இல்லை. ஜெய் ஸ்ரீ ராம் கோசங்களை முழங்கியவாறு கும்பல் ஒன்று இளைஞரை நிர்வாணப்படுத்தி அடித்து சித்திரவதை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி இருக்கிறது. மேலும் இந்த வீடியோவில் இளைஞர் சிறுநீர் குடிக்க வற்புறுத்தப்பட்டதும் பதிவாகி இருக்கிறது . இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.