முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 100 தொகுதிகளில் 100 சிறப்பு முகாம்கள் ஒரே நாளில் நடத்தப்படும்” என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் மூன்று இடங்களில் நடத்தப்பட்டது. இந்த முகாமினை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடந்த ஆட்சியில் மருத்துவ காப்பீட்டுக்கான பிரிமியம் தொகை ஒரு வருடத்துக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.699 ஆக இருந்தது, இந்த ஆட்சியில் ரூ.849 ஆக உயர்த்தப்பட்டது என்று கூறினார்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தினை பொறுத்தவரை இந்தியாவுக்கே வழிகாட்டும் அமைப்பாக தமிழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் யாரும் விடுபட்டு போகக்கூடாது என்கின்ற வகையில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, இந்த சிறப்பு முகாம்கள் தொடங்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. மிக விரைவில் தமிழகத்தில் 100 தொகுதிகளில் 100 சிறப்பு முகாம்கள் ஒரே நாளில் நடத்தப்படும்” என்று அமைச்சர் கூறினார்.