மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனு மீதான விசாரணை வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
காவிரியின் குறுக்கே, ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய நான்கு அணைகளை, கர்நாடக அரசு கட்டியுள்ளது. இதனால், தமிழகத்தில் காவிரி நீரோட்டம் தடைபட்டு உள்ளது. இந்நிலையில், மேகதாது என்ற இடத்தில் புதிய அணையை கட்ட, கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்றால், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். இதற்காக, காவிரி மேலாண்மை ஆணையத்திடம், கர்நாடக அரசு அனுமதி கேட்டுள்ளது.
மேகதாது அணை தொடர்பான விவாதம் நடத்த அனுமதிக்கப்படும் என காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க தடை கோரி, உச்சநீதிமன்றத்தில், கடந்த 7ஆம் தேதியன்று தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனு, வரும் 19ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணையை பொறுத்தே, இம்மாதம் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடக்குமா என்பது தெரியும்.