கடந்த திங்கட்கிழமை ஹரியானா மாநிலத்தில் இருக்கின்ற நுஹ் மாவட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கம் நடத்திய ஊர்வலத்தை ஒரு மர்ம கும்பல் தடுக்க முயற்சி செய்தது. இதனை தொடர்ந்து, இரண்டு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, பின்பு அந்த தகராறு வன்முறையாக மாறியது. ஆகவே அந்த மாவட்டத்திலும் மற்றும் அதற்கு அருகில் உள்ள பல்வால் மாவட்டத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறையை தடுக்க முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்ற நிலையில், அரியானாவில் தற்போது கலவரம் அதிகரித்து வருவதால், மத்திய அரசு அவற்றை உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று சொல்லப்படுகிறது.
அதோடு, நுஹ் மாவட்டத்தில் கடந்த திங்கள் கிழமை தொடங்கிய இந்த வன்முறை அதற்கு அடுத்த நாள் அண்டை மாவட்டமான குருகிராம் வரையில் பரவியது. மேலும் அந்த வன்முறை கும்பல் ஒருவரை கொலை செய்து, உணவகத்திற்கு தீ வைத்தது. அதோடு, கடைகளையும் சேதப்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் தான், நுஹ் மாவட்டத்தில் இருக்கின்ற டவுருவில் இரண்டு மசூதிகள் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நேற்று இரவு திடீரென்று குண்டு வீசி சென்றதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 11:30 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த சம்பவத்தின் காரணமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதோடு, இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு படையினர் இரண்டு மசூதிகளுக்கும் விரைந்து சென்று தீயை அணைத்து உள்ளனர்.