டெல்லி மாநிலம் சராய் காலே கான் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்த பெண்ணை, கூட்டு பலாத்காரம் செய்த மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
கடந்த அக்டோபர் 11ஆம் தேதி சராய் காலே கான் பகுதியில் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு வந்தவுடன் பாதிக்கப்பட்ட பெண், மருத்துவரிடம் தான் 3 நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
ஆனாலும், கடுமையான உடல்நல பாதிப்புகளால் அவரால் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியவில்லை. இதையடுத்து, குற்றவாளிகளை பிடிக்க மொத்தம் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு 700-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன்படி பிரபு மஹ்தோ, பர்மோத் என்ற பாபு மற்றும் முகமது ஷம்சுல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அக்டோபர் 10ஆம் தேதி பழைய டெல்லி ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு பெண் அமர்ந்திருப்பதை பர்மோத் கவனித்துள்ளார். மாற்றுத்திறனாளி பிச்சைக்காரரான ஷம்சுல் என்பவருடன் சதி செய்து, மனநலம் குன்றிய அப்பெண்ணை வலுக்கட்டாயமாக வனாந்திரமான பகுதிக்கு இழுத்துச் சென்று கூட்டு வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை ஆட்டோ டிரைவர் பிரபு மஹ்தோ நேரில் பார்த்துள்ளார்.
இதையடுத்து, அவரும் அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், மஹ்தோ பாதிக்கப்பட்டவரை சராய் காலே கான் அருகே வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஒடிசாவைச் சேர்ந்தவர். இவர் உயர் படிப்பு வரை படித்துள்ளார். மனநல குறைபாடு உடைய அவர், தனது குடும்பத்திற்கு தெரிக்காமல் மே 9 ஆம் தேதி டெல்லிக்கு பயணம் சென்றுள்ளார். அவரை தேடிப்பார்த்த குடும்பத்தினர், ஜூன் 9ஆம் தேதி பூரியில் உள்ள கும்பர்பாடா காவல் நிலையத்தில் காணவில்லை என புகார் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
Read More : ”திமுகவை அழிக்க வந்துருக்கீங்களா”..? ”பாக்கதான போறீங்க”..!! விஜய்யை அட்டாக் செய்த உதயநிதி..?