சேலம் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை, 42-வது முறையாக எட்டி சாதனை படைத்துள்ளது.
கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது. அந்த அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால், அணைகளின் பாதுகாபு கருதி கடந்த 8ஆம் தேதி முதல் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருந்தது. அன்று காலை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து படிப்படியாக வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில், அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 349 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், அணையின் முழுகொள்ளளவான 120 அடியை எட்டி அணை நிரம்பியது. இதையடுத்து அணையின் இடது கரை பகுதியில் காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது. மேட்டூர் அணை 42-வது முறையாக நிரம்பி உள்ளது. மேலும் இந்த ஆண்டில் முதன்முறையாக அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணை நிரம்பினாலும் வினாடிக்கு 1.13 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர் அப்படியே அணையில் இருந்து திறந்து விடப்பட்டது. அதன்படி அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக முதலில் வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. மேலும், அணையையொட்டி உள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. இதனால் 16 கண் பாலம் பகுதியில் தண்ணீர் பயங்கர சத்தத்துடன் காவிரியில் சீறிப்பாய்ந்து வருகிறது. இதனை 16 கண் பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள புது பாலத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
இதற்கிடையே, அணையில் இருந்து உபரி நீர் வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேல் வெளியேற்றப்பட்டு வருவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மேட்டூர் அணைக்கு நேரில் வந்து அணையை பார்வையிட்டார். அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு ஒரு லட்சத்து 23 ஆயிரம் கன அடி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் பொதுப்பணித்துறை சார்பில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், காவிரி கரையையொட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்ஃபி எடுக்க ஆற்றில் இறங்காதீர்கள் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.