பெங்களூருவில் கர்நாடக மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீ ராமுலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர், “கர்நாடக மாநிலத்தில் ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் திட்டத்தை மாநில அரசு கையில் எடுத்துள்ளது.
விரைவில் இது குறித்த அவசர சட்டம் இயக்கப்படும். மேலும், கர்நாடக மாநிலத்தில் புதிதாக நான்காயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. ஒன்பது லட்சம் கிலோ மீட்டர் வரை ஓடிய பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட உள்ளது. இது குறித்து முதல்வரிடம் தெரிவித்துள்ளோம்.
விரைவில் அவரும் ஒப்புதல் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனிம வளத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வைத்து கர்நாடக பகுதிக்கு 600 பேருந்துகளை வாங்க முடிவெடுத்துள்ளோம். 2030க்குள் படிப்படியாக கர்நாடக முழுவதும் டீசல் பேருந்துகள் நிறுத்தப்பட்டு மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதற்காக புதிய 2000 ஓட்டுனர்களை நியமிக்க இருக்கிறோம். ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்கள் நியமிக்கப்படுவார்கள். போக்குவரத்து கழகங்களுக்கு தினமும் 100 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. ஊழியர்களுக்கு சம்பளம் எப்படியாவது கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஆனால், இதற்காக கர்நாடக மாநில பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எந்த எண்ணமும் இல்லை. எனவே மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. போக்குவரத்து துறை சேவை மனப்பான்மையுடன் செயல்படுகிறது. எனவே மக்களுக்கு சுமை கொடுக்க விரும்பவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.