முரசொலி அறக்கட்டளை அலுவலக நிலம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டு இருக்கிறது. முரசொலி அறக்கட்டளை அலுவலகம் அமைந்திருக்கும் இடம் பஞ்சமி நிலத்திற்கு சொந்தமானது என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சீனிவாசன் தேசிய பட்டியலின் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலர் மற்றும் முன்னாள் ராஜ்ய சபா எம்பி ஆர்.எஸ் பாரதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் தேசிய பட்டியலின ஆணையத்திற்கு முரசொலி நிலம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவிக்கபட்டிருந்தது.
இந்த மனு தொடர்பான விசாரணையில் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதன்படி தேசிய பட்டியலின ஆணையம் அனுப்பிய பழைய தகவல்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் முரசொலி அறக்கட்டளை நிலம் தொடர்பாக புதிய விசாரணையை மேற்கொள்ளவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எல்லோரிடமும் விளக்கத்தைப் பெற்று நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ள நீதிபதிகள் ஆர்.எஸ் பாரதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்திருக்கின்றனர். இந்தத் தீர்ப்பால் திமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.