கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இருக்கும் மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர் திலீப்குமார்(58). இவர் முத்தாண்டிக்குப்பம் வல்லம் கிராமத்தில் இருக்கும் ரேஷன் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி அஞ்சலை தேவி. இவர்களுக்கு ஒரு மகனும், மகள்ளும் உள்ளனர். நேற்று இரவு திலீப்குமார், இயற்கை உபாதை கழித்து விட்டு வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார். பிறகு நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லை.
இதனால் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் திலீப்குமாரை பல இடங்களில் தேடி பார்த்தனர். அவரை பற்றிய எந்தவொரு தகவலும் தெரியவில்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரது கரும்பு தோட்டத்தில் கழுத்து அறுக்கப்பட்டு திலீப்குமார் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை காவல் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர்.
திலீப்குமாரை மர்மநபர்கள் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததுள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட இடத்தில் தடயங்களை மறைக்க மிளகாய் பொடியை தூவிச் சென்றுள்ளனர் என்று காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது. ஆனால் அவரை கொலை செய்தவர்கள் யார், எதற்காக அவரை கொலை செய்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இதை தொடர்ந்து திலீப்குமாரின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், திலீப்குமாரை முன்விரோதம் காரணமாக கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்களா, அல்லது வேறு என்ன காரணம், என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்த மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க மூன்று தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.