இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதனை பிரதமர் மோடி ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா என்றால் தெரியாதவர்களே இல்லை. 1975 ஆம் ஆண்டு அன்னக்கிளி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இன்றுவரை மக்கள் மனதில் நீங்காமல் இடம்பிடித்திருப்பவர் அவர். தமிழ் மட்டும் இல்லாமல் பல மொழிகளில் 1000 படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ளார்.
இளையராஜா 1981 தமிழக அரசின் கலைமாமணி விருதும், 1988 ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது, 1995 ஆம் ஆண்டு கேரள அரசின் விருது, 1994 மற்றும் 1996 ஆம் ஆண்டு இசையில் சாதனை புரிந்ததற்காக முனைவர் பட்டம் பெற்றார். 2010 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் 2018 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதும் பெற்றார். மேலும் இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறை பெற்றுள்ளார்.
பாபாசாகேப் அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு ‘அம்பேத்கர் அன்ட் மோதி’ என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்ட நூலுக்கு இளையராஜா எழுதிய முன்னுரை பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அப்போதே இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. ஆனால் தற்போது அந்த அறிவிப்பை பிரிதமர் மோடி அவர்களே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
பிரிதமர் மோடியின் ட்விட்டர் பதிவில் இளையராஜா என்ற படைப்பு மேதை தலைமுறை தலைமுறையாக மக்களை கவர்ந்தவர். அவரது படைப்புகள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன. அவரது வாழ்க்கைப் பயணம் சமமாக ஊக்கமளிக்கிறது – அவர் ஒரு தாழ்மையான பின்னணியில் இருந்து உயர்ந்து இவ்வளவு சாதித்தார். அவர் ராஜ்யசபாவுக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்று குறிப்பிட்டுள்ளார்.