மூதாட்டியின் தலையில் கல்லை போட்டு கொடூர கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பமாக ஆயுதப்படை காவலர் நகைக்காக கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மேலேறி கிராமத்தைச் சேர்ந்தவர் யசோதம்மாள் (76). இவருக்கு ஒரு மகனும், 3 மகளும் உள்ளனர். இவர்கள் 4 பேரும் தங்களது குடும்பத்தாருடன் சென்னையில் வசித்து வருகின்றனர். மூதாட்டி யசோத்தம்மாள் மட்டும் மேலேறி கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி வழக்கம்போல் தூங்கச் சென்ற மூதாட்டி, மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் வீட்டிலிருந்து வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, மூதாட்டி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இதையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மூதாட்டியை கொலை செய்து வீட்டிலிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கர்களை வரவழைத்த போலீசார் தடயங்களை சேகரித்தனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டியின் பேரன் முறையான சென்னை ஆயுதப்படை காவலராக இருந்துவரும் சதீஷ் (எ) சக்திவேல் என்பவர் தான் யசோதம்மாள் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தது போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து நகைக்காகதான் கொலை செய்துள்ளார் என்பதும் உறுதியாகியிருக்கிறது. இக்கொலை சம்பவத்தில் இவருடன் வேறு யாரேனுக்கும் தொடர்பு உள்ளதா எனவும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று கொலையாளியான சதிஷ் (எ) சக்திவேல், பிரேதத்தை சுற்றி சுற்றி வந்து யாரோ கொலை செய்து விட்டதை போன்று நாடகமாடியது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.