சம்பாதித்த சொத்துக்களை உயிலாக எழுதி வைப்பார்கள். ஆனால், பூர்வீக சொத்துக்களை உயிலாக எழுதி வைக்க முடியுமா? தந்தை உயில் எழுதி வைக்காத பட்சத்தில், மகளுக்கு சொத்தில் உரிமை உண்டா? சட்டம் சொல்வது என்ன? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஒருவர் உயிரோடு இருக்கும் காலத்திலேயே யாருக்கு எவ்வளவு சொத்து என்பதை தெளிவாக குறிப்பிட்டு உயில் எழுதுவது, பிற்காலத்தில் பல சங்கடங்களை, சிக்கல்களை தீர்க்க உதவும். அந்தவகையில், ஒருவர் தன்னுடைய சொத்துக்களை தன்னுடைய வாழ்நாளுக்கு பிறகு, தன்னுடைய உறவினர்களுக்கு சேரும்படி எழுதி வைக்கும் பத்திரமே “உயில் பத்திரம்” ஆகும். இது முழுக்க முழுக்க சுயநினைவுடன் மட்டுமே எழுத முடியும். அதுவும் தான் சுயமாக சொந்தமாக சம்பாதித்ததை, சொத்துக்களை மட்டுமே உயிலாக எழுதி வைப்பதாகும்.
பூர்வீக சொத்தாக இருந்தாலும் அதை யாருக்கும் உயிலாக எழுத முடியாது. பிரித்து எழுதி வைக்கவும் முடியாது. அம்மா, பாட்டி, மாமா, சகோதரன் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட சொத்துக்களை மூதாதையர் சொத்தாக கருத முடியாது. தாத்தா, பாட்டி இருந்தாலும் கூட, இந்த சொத்துக்களை பிரித்து வாரிசுகளுக்கு தர முடியாது. உயில் எழுதி வைக்காவிட்டாலும் கூட, அவர்களின் நேரடியாக வாரிசு அடிப்படையில் பிள்ளைக்கு வந்துவிடும். ஒருவேளை, பூர்வீக சொத்தை உயிலாக எழுதி வைக்க வேண்டுமானால், தங்களின் பெயருக்கு சொத்துக்களை மாற்றி, அதற்கு பிறகே உயிலாக எழுத முடியும்.
அதேபோல, அப்பா சுயமாக சம்பாதித்த சொத்தில், பெண்களுக்கும் உரிமை உண்டு. திருமணமான பெண்களானாலும், திருமணமாகாத பெண்களானாலும், பெண்களுக்கும் இந்த சொத்தில் பங்கு உள்ளது. அப்பா தான் சம்பாதித்த சொத்தை, உயில் எழுதாதபோதும், அவரது நேரடி வாரிசுகளுக்கு இந்த சொத்தில் சம உரிமை உண்டு. ஆனால், திருமணமான பெண்ணின் அப்பா, தான் சுயமாக சம்பாதித்த சொத்தை வேறு யாருக்காவது உயில் எழுதி வைத்திருந்தால், அதில் பங்கு கோர முடியாது. ஒருவேளை, அதேபோல, அப்பா சுயமாக சம்பாதிக்காத, பூர்வீக சொத்தாக இருந்தால் அதில் அனைவருக்கும் சம பங்கு உள்ளது.
சுருக்கமாக சொல்லப்போனால், இந்து வாரிசு உரிமை சட்டப்படி, தந்தை உயில் எதுவும் எழுதி வைக்காத நிலையில், தந்தையின் சுய சம்பாத்திய சொத்து அல்லது குடும்ப பாகப் பிரிவினை மூலமாக கிடைத்த பரம்பரை சொத்தில் பங்கு பெற வாரிசு என்ற அடிப்படையில் மகள்களுக்கும், விதவை மனைவிக்கும் முழு உரிமை உண்டு. “காலமான தந்தையின் சகோதரர்களுடைய வாரிசுதாரர்கள் உள்ளிட்ட மற்ற குடும்ப இணை உறுப்பினர்களை விட, தந்தையின் நேரடி வாரிசான மகள்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்” என்று உச்சநீதிமன்றமும் தெரிவித்திருக்கிறது.
அதேபோல, விவாகரத்தாகி, மறுமணம் செய்து கொள்ளாத பெண்ணின் மகனுக்கு, முன்னாள் கணவரின் பூர்வீக சொத்திலும் பங்கு உள்ளது. அந்த முன்னாள் கணவர் இன்னொரு பெண்ணை மணந்து அவருக்கு குழந்தைகள் இருந்தாலும் கூட, இந்த பெண்ணின் மகனுக்கு பூர்வீக சொத்தில் உரிமை உண்டு என சட்டம் சொல்கிறது. அதேபோல, உயில் இல்லாமல் சொத்துக்களை பிரிக்க முடியுமா? எப்படி பிரிப்பது? இதுகுறித்தும் சட்டத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
இந்து வாரிசுரிமை சட்டம் 1956-ன்படி, சொத்தின் உரிமையாளர் உயில் எழுதாமல் இறந்துவிட்டால், அந்த சொத்தை முதல் வாரிசுகள் என்று சொல்ல கூடிய மனைவி, மகன், மகள் அல்லது அம்மா போன்றவர்களுக்கு பிரித்து தரலாம். முதல் வாரிசுகள் இல்லாத பட்சத்தில், அதாவது உரிமையாளரின் மனைவி, குழந்தைகள் இல்லாத பட்சத்தில், அந்த சொத்தை இரண்டாம் வாரிசுகளுக்கு, அதாவது மகனின் மகள் அல்லது மகன், மகளின் மகள் அல்லது மகள், சகோதரன், சகோதரி போன்றவர்களுக்கு சொத்தை பிரித்து கொடுக்கலாம். எனவே, உயில் எழுதுவது குறித்த சந்தேங்களை, வழக்கறிஞர்களிடம் கேட்டு தெளிவு பெறுவதும், ஆலோசனை பெற்றுக்கொள்வதும் நல்லது.
Read More : லொள்ளு சபாவிடம் ரூ.10 லட்சம் ஏமாற்றிய தயாரிப்பாளர்..!! அந்த பணத்தை வைத்துதான் டிபனே சாப்பிடுவேன்..!!