குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஊட்டச்சத்துப் பொருளான செர்லாக்கில் அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் எனப்படும் சுவைக்கு அடிமையாகும் உப்புக்கள் சேர்க்கப்படுவதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
பப்ளிக் ஐ எனும் அமைப்பு நடத்திய ஆய்வின் அறிக்கை முடிவுகள் தற்போது வெளியாகின. அதன்படி, உலகின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான நெஸ்லே, பல நாடுகளில் குழந்தைகளின் பால் மற்றும் தானியப் பொருட்களில் சர்க்கரை மற்றும் தேனைச் சேர்ப்பதாகவும், உடல் பருமன் மற்றும் நாள்பட்ட நோய்களைத் தடுக்கும் சர்வதேச வழிகாட்டுதல்களை மீறுவதும் கண்டறியப்பட்டது. நெஸ்லேவின் முக்கிய சந்தையான ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் விற்கப்படும் செர்லாக்கில், உடலுக்குக் கேடு விளைவிக்கும் அடிக்டிவ் சுகர் எதுவும் கலக்கப்படவில்லை.
ஆனால், இந்தியா மற்றும் கிழக்காசிய நாடுகளில் விற்பனை ஆகும் செர்லாக்கில், ஆபத்தை ஏற்படுத்தும் அடிக்டிவ் சுகர்கள் கலக்கப்படுவதாகவும் அந்தப் புலனாய்வு நிறுவனத்தின் ஆய்வுகள் சொல்கிறது. நெஸ்லேவின் இந்த செயலை உலக சுகாதார நிறுவனம் கண்டித்துள்ளது. ஆறு மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செர்லாக் வழங்கப்படுகிறது. சிறு வயது முதலே குழந்தை அடிக்டிவ் சுகருக்கு ஆட்பட்டால் பிற்காலத்தில் உடல் உபாதைகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதில் அளித்துள்ள நெஸ்லே இந்தியாவின் செய்தித் தொடர்பாளர், ” கடந்த ஐந்து ஆண்டுகளில் குழந்தை தானிய வரம்பில் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை 30% வரை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவான செர்லாக்கில் இரட்டைத் தரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மறுக்காமல் நிறுவனம் எதிர்பாராத பதிலைக் கூறியிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. நெஸ்லே நிறுவனம் இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான செர்லாக் தயாரிப்புகளை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது