தலைநகர் டெல்லியில் சுமார் 96 வருடங்கள் பழமையான நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடத்தில் போதுமான இடவசதி இல்லாததன் காரணமாக, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்து அதன் அடிப்படையில், சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தின் கீழ் கடந்த 2020 ஆம் வருடம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இத்தகைய நிலையில், சுமார் 970 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதியுடன் கூடிய புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அதேநேரம் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தி, சுமார் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்த விழாவை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
டெல்லியை இணைக்கும் பஞ்சாப், ஹரியானா போன்ற அண்டை மாநிலங்களின் எல்லை பகுதிகளில் முழுமையாக சீல் வைக்கப்பட்டிருக்கிறது. அதோடு பாதுகாப்பு காரணங்களுக்காக போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.