வங்க கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக, கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு முழுவதும் மழையில் தத்தளித்து வந்தது.இந்த நிலையில், கடந்த9ம் தேதி இரவு 2 மணி அளவில் இந்த மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.என்னதான் புயல் கரையை கடந்து விட்டாலும் மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை. தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்த வண்ணம் தான் இருக்கிறது.
இந்த நிலையில், சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் 7 வது தெருவை சேர்ந்தவர் லட்சுமி(40). இவர் குடிசை வீட்டில் தன்னுடைய மகள்களுடன் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று முன்தினம் மாண்டஸ் புயலின் காரணமாக, சென்னை முழுவதும் கனமழை பெய்து வந்தது. பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது, கனமழை மற்றும் புயலின் காரணமாக, தன்னுடைய வீட்டிலேயே இருந்தால் ஆபத்து வந்துவிடும் என்று நினைத்த லட்சுமி, தன்னுடைய மகள்களுடன் அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பு வாகனம் நிறுத்துமிடத்தில் சென்று தங்குவதற்கு முடிவு முடிவு செய்திருக்கிறார்.
அதனடிப்படையில் தன்னுடைய அண்ணன் மகனான ராஜேந்திரன்(25) என்ற நபருடன் அந்தப் பகுதியில் தேங்கி கிடந்த மழை நீரை கடந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு போய்க்கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் அந்தப் பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த லட்சுமியின் மீது மின்சாரம் தாக்கியது. இதனைக் கண்ட ராஜேந்திரன் லட்சுமியை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இது தொடர்பாக உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, இந்த தகவலினடிப்படையில் விரைந்து வந்த மடிப்பாக்கம் காவல்துறையினர் மின் இணைப்பை துண்டித்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள்.இதனைத் தொடர்ந்து லட்சுமி மற்றும் ராஜேந்திரன் உள்ளிட்டோரின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இது தொடர்பாக மடிப்பாக்கம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.