ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பம் மாவட்டம் பிரிகொரா கிராமத்தில் வசித்து வருபவர் உத்தம் மைத்தி (27). அவரது மனைவி அஞ்சனா மஹடொ (26). இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஆரம்ப பள்ளி கூடத்தில் அந்த குழந்தையை சேர்த்துள்ளனர். ஆனால், தங்களுடைய குழந்தை சரியாக படிக்காமல் எப்பொழுதும் விளையாடிக் கொண்டே இருப்பதாக இருவரும் நினைத்தனர்.
எனவே குழந்தைக்கு சொல்லி கொடுத்து, சரியாக படிக்கும்படி கூறியுள்ளனர். இருந்தும் குழந்தை படிப்பில் ஆர்வம் காட்டாததால் ஆத்திரமடைந்த பெற்றோர் குழந்தையின் கைகளை கட்டி கடுமையாக அடித்துள்ளனர். அடி தாங்கமுடியாமல் குழந்தை மயக்கமடைந்துள்ளது. உடனே, குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உயிரிழந்த குழந்தையை எடுத்துக்கொண்டு சல்கஞ்ச்ஹரி நகரில் இருந்து ரெயிலில் ஏறி ஹலுதி நகருக்கு வந்துள்ளனர். அங்கு ரெயில்வே ஸ்டேஷன் அருகே இருந்த முட்புதருக்குள் குழந்தையை வீசிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். இந்த சம்பவம் ஜூலை 29-ம் தேதி நடந்தது ஆனால் குழந்தையின் பெற்றோர் ஒரு வாரம் கழித்து தங்கள் வீட்டிற்கு வந்துள்ளனர்.
வீட்டிற்கு வந்த தம்பதியிடம் குழந்தை எங்கே என பக்கத்து வீடுகளில் வசித்து வருபவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடந்த செவ்வாய்கிழமை கணவன், மனைவியிடம் இருவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் சரியாக படிக்காததால் தங்கள் நான்கு வயது மகளை கடுமையாக தாக்கியதால், குழந்தை உயிரிழந்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து கணவன், மனைவியை இருவரையும் கைது செய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.