திருவள்ளூர் மாவட்டம் படியநல்லூர் அண்ணா நகரில் வசித்து வருபவர் கந்தன். இவரது மகன் அபிஷேக் (23). சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் முதலாம் வருடம் படித்து வந்தார். கானா பாடல் பாடுவதில் அபிஷேக் பிரபலமானவர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தனது உறவினர்களுடன் வேளாங்கண்ணிக்கு அபிஷேக் பாதயாத்திரை சென்றார். கிழக்கு கடற்கரை சாலை வழியாக அவர்கள் நடந்து சென்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கைப்பாணி என்ற இடத்தில் காலை 9 மணியளவில் அபிஷேக் மற்றும் அவருடன் வந்தவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பைக்கில் வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அபிஷேக்கை வழிமறித்தனர். இதைப்பார்த்த அவருடன் வந்தவர்கள் இதை கண்டவுடன் அலறி நாலாபுறமும் ஓடினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அபிஷேக் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவர்கள் அவரை சுற்றிவளைத்து ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினார். இதில் கை, கால், தலை என உடலில் 15-க்கும் அதிகமான இடங்களில் வெட்டுக்காயம் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார்.
அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். பிரதான சாலையில் ஒரு கும்பல் வாலிபரை வெட்டி சாய்த்துவிட்டு சென்றதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மரக்காணம் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அபிஷேக்கை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அபிஷேக் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கொலையாளிகளை பிடிக்க கோட்டக்குப்பம் துணை காவல் கண்காணிப்பாளர் மித்ரன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் தனிப்படை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மரக்காணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.