புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த காரக்கோட்டை பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக சொந்த அண்ணியை கொலை செய்த வழக்கில் கொழுந்தனாரை காவல்துறை தேடி வருகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த காரகோட்டை பகுதியைச் சார்ந்தவர் கோபிநாதன் இவரது மனைவி சுலோக்சனா வயது 65. இந்த தம்பதியினருக்கு விந்தியா என்று மகள் இருக்கிறார்.கோபிநாதன் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விடவே சுலோக்சனா தனது மகள் இந்தியாவுடன் வசித்து வந்துள்ளார். விந்தியாவிற்கு திருமணம் முடிந்த பின் அவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கிராமத்தில் தனியாக வசித்து வந்திருக்கிறார் சுலோக்சனா. சுலோச்சனாவிற்கு ஆதரவாக அனைத்து உதவிகளையும் செய்து வந்திருக்கிறார் அவரது கணவரின் தம்பி செந்தில்குமார். இவர்கள் இருவருக்குமிடையே பெரும் அளவில் பணம் கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி சுலோக்சனாவின் செல்போனிற்கு தொடர்பு கொண்டு இருக்கிறார் அவரது மகள் விந்தியா. அப்போது அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் பதறிப் போன விந்தியா தனது தாய் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டிலும் சுலோக்சனா இல்லை. இதனைத் தொடர்ந்து அவர் மணமேல்குடி காவல் நிலையத்தில் எனது தாயை காணவில்லை என புகார் அளித்தார். இந்தப் புகாரை விசாரித்த காவல்துறையினர் சுலோக்சனாவின் செல்போன் எண்ணிற்கு வந்த அழைப்புகளை விசாரித்த போது அவர் கடைசியாக செந்தில்குமாரிடம் பேசியதை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து கடைசியாக பேசிய இடத்தை தேடிப் பார்த்தபோது கட்டுமாவடி அருகே சோமநாதப்பட்டினம் என்ற கடற்கரை பகுதியைக் காட்டியது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் அங்குள்ள காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு பெண் சடலம் இருப்பதை கண்டறிந்தனர். அந்த சடலத்தை மீட்ட போலீசார் பிரத பரிசோதனைக்காக மேலமனக்கொடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் செந்தில்குமார் நண்பரான ரமேஷ் என்பவரை கைது செய்த காவல்துறை அவரிடம் நடத்திய விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக தனது அண்ணி சுலோக்சனாவை கொலை செய்ய திட்டமிட்டு சோமநாதப்பட்டினம் கடற்கரைக்கு அழைத்து வந்து அவரது தலையில் கட்டையால் அடித்து பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. மேலும் அவர் கழுத்தில் அணிந்து இருந்த நான்கு பவுன் தங்க சங்கிலியையும் திருடி சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய செந்தில்குமாரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.