செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கண்ணிவாக்கம், குந்தன் நகரை சேர்ந்தவர் உமேந்தர் (33). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பவ்யா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர் நேற்று முன்தினம் காலை முட்டுக்காடுக்கு தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு சுற்றுலா சென்றுள்ளார். பிறகு பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தியேட்டரில் அனைவரும் படம் பார்த்து உள்ளனர்.
பின்னர், மாலையில் வீடு திரும்புவதற்காக வாடகை காரை முன்பதிவு செய்தனர். தியேட்டர் முன்பு வாடகை கார் வந்ததும் உமேந்தரும் அவரது குடும்பத்தினரும் காரில் ஏறினர். அப்போது ஓட்டுநர் ரவி ஓ.டி.பி. எண்ணை கேட்டுள்ளார். இதில் உமேந்தருக்கும் கார் ஓட்டுநர் ரவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் உமேந்தரும், அவரது குடும்பத்தினரும் காரை விட்டு இறங்கினர். அப்போது ஆத்திரம் அடைந்த வாடகை கார் ஓட்டுநர் ரவி உமேந்தரை சரமாரியாக அடித்துள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த உமேந்தர் மயங்கி விழுந்தார். இதுபற்றி தகவலறிந்த கேளம்பாக்கம் காவல்துறையினர் விரைந்து சென்று உயிருக்கு போராடி கொண்டு இருந்த உமேந்தரை அருகில் உள்ள ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உமேந்தர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் கார் ஓட்டுநர் ரவியை கைது செய்தனர். குடும்பத்தினர் கண் எதிரே ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.