11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் நீட் தேர்வு பயத்தால் சென்னை சூளைமேட்டை சேர்ந்த மாணவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல பெற்றோர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியது. 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வெளியான நேரத்திலும் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மாவட்டம், மூலப்பாளையம் கிராமத்திலுள்ள தீரன் சின்னமலை தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் முத்துலட்சுமி (16). சிறு வயதிலேயே தாயை இழந்த முத்துலட்சுமி, கடந்த சில வருடங்களுக்கு முன்பு தந்தையையும் பறி கொடுத்துள்ளார். இதன் காரணமாக, முத்துலட்சுமியை, முருகனின் சகோதரி சாந்தி வளர்த்து வந்துள்ளார். முத்துலட்சுமி ஈரோட்டில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 27ஆம் தேதி வெளியாகிய நிலையில், அதில் முத்துலட்சுமி தேர்ச்சி பெறவில்லை. இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக முத்துலட்சுமி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்த நிலையில், நேற்று சாந்தி வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வெளியே சென்றுள்ளார். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த முத்துலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சாந்தி கதவை நீண்டநேரமாக தட்டியும் திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்துச் சென்று பார்த்துள்ளார். அப்போது, முத்துலட்சுமி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிறுமியின் தற்கொலை குறித்து ஈரோடு தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து நடத்தி வருகின்றனர். தேர்வில் தோல்வியடைந்ததால் பிளஸ் 1 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.