கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் வசித்து வருபவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். மாணவி பள்ளிக்கு செல்லும்போது அவருக்கு செங்குட்டு பாளையத்தை உள்ள சரவணன் (20) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இரண்டு பேரும் கடந்த ஒரு வருடங்களாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிந்ததால் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த வாலிபருடன் பேசக்கூடாது, பழககூடாது என தங்களது மகளை கண்டித்தனர்.
இதனால் சரவணன் தனது காதலியை சந்திக்க முடியாமல் தவித்து வந்தார். மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் அங்கு வந்த சரவணன் மாணவியை கடத்தி சென்றார். நண்பர்கள் முன்னிலையில் அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பிறகு சரவணன் மாணவியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றார். மாணவியிடம் சரவணனின் பெற்றோர் விசாரித்த போது 16 வயது சிறுமியை அவர் திருமணம் செய்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து சரவணனின் பெற்றோர் மாணவியை பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் பிளஸ்-1 மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த சரவணன் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டம், கடத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக இருக்கும் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.