கடந்த 2020-ம் ஆண்டு சீன எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கு எதிரான ஆய்வு கடுமையாக்கப்பட்டது. இதனால் டிக்-டாக் பேன்ற 200-க்கும் மேற்பட்ட சீன நாட்டின் செல்போன் ஆப்கள் முடக்கப்பட்டன. இந்தியாவில் வணிகம் புரியும் சீன நாட்டு நிறுவனங்கள் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையில், சீன நிறுவனமான விவோ செல்போன் கம்பெனி அதன் முதல் விற்பனை தொகையான ரூ.62,476 கோடியை, இந்தியாவுக்கு வரிசெலுத்தாமல் சீனாவுக்கு அனுப்பியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விவொ செல்போன் கம்பெனிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதன் அடிப்படையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த நிறுவனம் மற்றும் அதனோடு தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
டெல்லி, உத்தரபிரதேசம், மராட்டியம் மற்றும் மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையின் விவரங்களை அமலாக்க அலுவலகம் நேற்று வெளியிட்டது. அதில், அந்த நிறுவனம் மற்றும் அதனோடு தொடர்புடைய 23 நிறுவனங்களுக்கு சொந்தமான 48 இடங்களில் சோதனை செய்யப்பட்டதாக, சோதனையின்போது 119 வங்கிக்கணக்குகளில் இருந்த ரூ.66 கோடி நிரந்தர வைப்புத்தொகை, ரூ.75 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 2 கிலோ தங்கக்கட்டிகள் என மொத்தம் ரூ.465 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் பணம் பறிமுதல் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.