தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை உருவாக்க, கல்வியாளர்கள், வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, மாநில கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் பல நிலை பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
அனைவருக்கும் உயர் கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் போன்ற பத்து அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவது பற்றி பொது மக்களிடம் கருத்துகள் கேட்கப்படும் என்று குழு தலைவர் முருகேசன் தெரிவித்துள்ளார். எனவே, எட்டு மண்டலங்களாக பிரித்து மாநிலம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் மாநில கல்வி கொள்கை குறித்து, வரும் 26, 27 ஆம் தேதிகளில் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக குழு தலைவர் முருகேசன் கூறியுள்ளார்.