புதுவை சாணாரப்பேட்டை சுடுகாடு பகுதியில் ஆயுதங்களுடன் ஒரு ரவுடி கும்பல் பதுங்கி இருப்பதாக வடக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து, காவல்துறை கண்காணிப்பாளர் பக்தவத்சலம் உத்தரவின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் ஆய்வாளர் ஜெய்சங்கர், துணை ஆய்வாளர் கலையரசன் உள்ளிட்டோரின் தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதியில் ரோந்துக்காக சென்றனர்.
அப்போது அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த 6 பேர் கொண்ட கும்பல் காவல்துறையினரை பார்த்தவுடன் தப்பி செல்ல முயற்சி செய்தது. அவர்களில் 4 பேரை மடக்கி பிடித்த காவல்துறையினர் அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு நாட்டு வெடிகுண்டு மற்றும் இரண்டு கத்தியை கைப்பற்றியுள்ளனர். அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் சாணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ் என்ற புளியங்கொட்டை (28) சதீஷ்குமார்( 30) விக்னேஷ் (23) பிரகாஷ் (19) என்ற நபர்கள் விவரம் தெரியவந்துள்ளது பிரபல ரவுடியான ரங்கராஜன் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய நண்பர்களான சதீஷ்குமார், விக்னேஷ், பிரகாஷ் உள்ளிட்ட 6 பேர் நாட்டு வெடிகுண்டு மற்றும் கத்தியுடன் சுடுகாடு பகுதியில் ஒன்று திரண்டு பிறந்தநாள் கொண்டாடியது தெரியவந்தது.
அதோடு அந்த கும்பலை சேர்ந்த ரெட்டியார்பாளையம் ஷாருக்கான், உறையூர் முகேஷ் உள்ளிட்டோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றன. கைது செய்யப்பட்ட 4 பேரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்திருக்கிறார்கள்.